10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம்: மதுரையில் கணக்கீடு அட்டவணை விநியோகம்
தமிழ்நாடு மின்சார வாரியம் 2014 டிச. 12-ம் தேதி மின்கட்டணத்தை திருத்தியமைத்தது. இதன்படி 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. 100 யூனிட்வரை பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1,200 யூனிட்வரை ரூ1.50, 500 யூனிட்வரை பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்களுக்கு ரூ.2, மீதியுள்ள 300 யூனிட்களுக்கு ரூ.3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
500 யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்தினால் 200 யூனிட்வரை ரூ.3.50, அடுத்த 300 யூனிட்டுக்கு ரூ.4.60, இதற்குமேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நிலைக்கட்டணமாக 500 யூனிட்வரை ரூ.20, இதற்கும் மேல் எனில் ரூ.50 வசூலிக்கப்படுகிறது. அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.1 முதல் 3 வரை பயன்பாட்டுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. 500 யூனிட்களுக்கும் மேல் பயன்படுத்து வோருக்கு மொத்தமாக ரூ.1,170 மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மதுரை மண்டல தலைவர் ச.சசாங்கன் கூறியதாவது: மின்பயன்பாட்டில் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் 10 யூனிட் கூடுதலாகிவிட்டாலும் ரூ.866 வரை கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது.
எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என முழுமையாகத் தெரியாததால் கூடுதலாக செலவிடும் கட்டாயம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மின் கணக்கீட்டு அட்டவணையை வெளியிட்டு, இதை வீடு,வீடாக விநியோகித்து வருகிறோம். இதுவரை 10 ஆயிரம் பிரதிகளை விநியோகித்துள்ளோம். 100 யூனிட்டுக்கு ரூ.120, 110 யூனிட் எனில் ரூ.185 கட்டணமாக செலுத்த வேண்டும்.
10 யூனிட்டுக்காக ரூ.85 கூடுதலாக செலவாகிறது. இதேபோல் 200 யூனிட்டுக்கு ரூ.320 கட்டணம் செலுத்தும் நிலையில், 210 யூனிட்டுக்கு ரூ.460 செலுத்த வேண்டும். 10 யூனிட்டுக்கு ரூ.250 கூடுதலாக செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதேபோல் 500 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.1,330 செலுத்தும் நிலையில் 510 யூனிட்டுக்கு ரூ.2,196 செலுத்த வேண்டும். இந்த பிரிவில் வருவோர் 10 யூனிட்டுக்காக ரூ.866 கூடுதலாக செலுத்த வேண்டும்.
10 யூனிட் மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தும்போது, அடுத்த கட்டண கணக்கீட்டு பிரிவுக்கு மாறிவிடுவதால் இந்தளவுக்கு கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது. எப்போதும் 500 யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்துவோருக்கு பிரச்சினை இல்லை. அதே நேரம், 100, 200, 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துவோர் அடுத்த கட்டண கணக்கீட்டு முறைக்கு மாறிவிடாத அளவுக்கு மின்சாரம் பயன்படுத்துகிறோமா என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
கணக்கீட்டுக்கு ஓரிரு நாளுக்கு முன்னதாகவே, எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளோம் என்பதை கண்காணிக்க வேண்டும். மின்கணக்கீட்டாளர் யூனிட்டுக்கு ஏற்ப சரியாக கணக்கிட்டுள்ளாரா என, கடந்தமுறை கணக்கீட்டை ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கூடுதல் செலவை தவிர்க்கலாம் என்றார். ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் உட்பட பலர் அட்டவணை விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எளிமையாக கணக்கிடும்விதம்
500 யூனிட்டுக்குமேல் வரும் மொத்த யூனிட்டுக்கும் X 6.60 (-) 1170
( எடுத்துக்காட்டு: 550 யூனிட் x 6.60 = 3630-1170 = 2460 )
No comments:
Post a Comment